புதன், 12 டிசம்பர், 2012

நினைவலைகள் 2: ரஜினி கமல் மற்றும் சரோஜா அத்தை

சரோஜா அத்தைக்கு கோலம்ன்னா உசுரு, வீட்டு  வாசலுக்கும் மெயின் ரோட்டிற்கும் நடுவில் உள்ள இடத்தை நன்றாக சாணிய விட்டு மெழுகி கோலம் போட்டு படு சுத்தமாக வைத்து இருக்கும்  யாராவது தெரிஞ்சோ தெரியாமலோ கோலத்தின் மீது நடந்தாலோ சைக்கிளில் சென்றாலோ பத்ரகாளியாக மாறி கோலத்தை மிதிச்சவங்க  தெருமுனையை தான்றவரைக்கும் வண்ட வண்டையா கழுவி ஊத்தும். தமிழில் இவ்வளவு  'நல்ல' வார்த்தைகள் இருப்பதே அத்தையின் வசவுகளுக்கு  பிறகுதான்  தெரிந்தது. நானும் அத்தை  மகன் குமாரும் மிக கவனமாக அந்த 'நல்ல ' வார்த்தைகளை குறித்து கொண்டு ஞாயுறுதோறும் வெள்ளவேரிக்கு மற்ற நண்பர்களோடு சென்று ஆள் அரவமற்ற இடத்தில அவ்வார்த்தைகளை உரக்க சொல்லி ப்ராக்ட்டிஸ் செய்வோம்.

ஒரு நாள் அத்தை வீட்டு திண்ணையில் குமாரும் நானும் பராக்கு பார்த்தபடி பேசி கோண்டிருந்தோம். அப்போது எதிர் வீட்டு  ராஜவேலு எங்களை நோக்கி வந்து  கொண்டிருந்தான், ராஜவேலும் குமாரும் ஒரே வகுப்பு தோழர்கள், நான் அவர்களைவிட  மூன்று வயது சிறியவன். ராஜவேலு வெறித்தனமான கமல் ரசிகன்  நானும் குமாரும் ரஜினி ரசிகர்கள். கமலின் 'காக்கிசட்டை' ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த காலகட்டம் அது. ராஜவேலு அன்றுதான் படத்தை பார்த்திருப்பான் போல எங்கள் காதில் ரத்தம் வரும் அளவு கமல் புராணம் பாடி கொண்டிருந்தான். நடுநடுவே ரஜினியை வேறு நக்கல் விட்டு கொண்டிருந்தான். குமாருக்கும் எனக்கும்  எரிச்சல் உச்சி மண்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

கமல் படம் பெருசா, ரஜினி படம் பெருசா என்று தொடங்கிய வாதம் உங்கப்பா  பெரியவரா எங்கப்பபா பெரியவரா, உங்க வீடு பெருசா எங்க வீடு பெருசா, உங்க வீட்டு அண்டா பெருசா எங்க வீட்டு அண்டா பெருசா என்று முடிவில்லாமல் நீண்டு கொண்டிருந்தது  கடைசியாக ராஜவேலுவே ஒரு திட்டத்தை முன்வைத்தான் அதாவது காக்கிச்சட்டை படத்தில் கமலும் வில்லன் கூட்டத்தை சேர்ந்த ஒருவனும் சண்டை காட்சியில்  காலும் காலும் , கையும் கையும் கோர்த்துக்கொண்டு  ஒரு  'O'  வடிவத்தில்  சுற்றி சுற்றி வருவார்கள் என்றும் அதுபோல் ராஜவேலும் எங்கள் இருவரில் யாராவது ஒருவரும் சேர்ந்து சுற்றிவர வேண்டும்  யார் முதலில் கைகால் வலிக்கிறது என்று விலகுகிறார்களோ அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும்.

கமல் சார்பாக ராஜவேலு ரெடியாக, ரஜினி சார்பாக யார் போறதுன்னு உலகமாக கேள்வி எழுந்தது குமார் என்னை கூர்ந்து நோக்கினான், இன்னும் கொஞ்ச நேரம் நீடித்தால் நான் கமல் ரசிகனாக மாறஅனைத்து சாத்தியகூறும் இருந்ததை என் கண்களில் தெரிந்த பீதியின் வழியே மிக சுலபமாக கண்டுபிடித்து அவனே களத்தில் குதிக்க முடிவு செய்தான். நான் நடுவராக நியமிக்கப்பட்டேன், இருவரும் கைகால்களை கோர்த்துக்கொண்டு தயாராக எனக்கு குமாரும் ராஜவேலும் மறைந்து ரஜினி கமலாகவே தென்பட்டார்கள்.முதல் ரவுண்டு முடியும் போது  சாணி மெழுகிய வாசல் சிறியதாக பெயர்த்து கொண்டுவந்தது அடுத்தடுத்து ரவுண்டில் வாசல் அலங்கோலமாக காட்சியளித்தது அனால் இருவரும் விடாமல் சுற்றிக்கொண்டு இருந்தனர்.

திடீரென்று முதுகில் ஒரு அழுத்தத்தை உணர்ந்தேன் எனக்கும் பூமிக்கும் உள்ள இடைவேளி குறைந்து இருந்தது புரியற மாதிரி சொல்லனும்னா பப்பரக்கா என்று கீழே விழுந்து கிடந்தேன்.   திரும்பி பார்த்தேன் அத்தை ஆவேசமாக நின்று கொண்டிருந்தார் வேடிக்கை பார்த்த நமக்கே இவ்வளுவுனா வாசல நாஸ்தி பண்ண ரஜினி கமலோட நிலைய எண்ணி மனது வலியிலும்  சிறியதாக குதூகலம் அடைந்தது, அடுத்த அடி விழும் முன் மின்னலாக ஓடி எதிர்(கமல் ) வீட்டு மாட்டு கொட்டகையின் பின்னால் மறைந்தேன். கமலும் ஒரே தாவலில் ரோட்டை தாண்டி வீட்டுக்குள் ஓடி மறைந்தார். கடைசியில் அத்தையிடம் அகப்பட்டது ரஜினி, கையில் கிடைத்த தென்னமட்டையால் விளாச ஆரம்பித்தார் அத்தை. சிறிது நேரம் கழித்து  மெதுவாக எட்டி  பார்த்தேன்,   அடிபட்ட இடத்தை தடவி கொண்டு திண்ணையில் பரிதாபமாக ரஜினி,  கமல் இருந்த  இடமே தெரியவில்லை,  என் பக்கத்தில் இருந்த கமல் வீட்டு எருமை மாடு ரஜினியை நோக்கி ஏனோ பரிதாபமாக கத்தி(கதறி!?)    கொண்டு இருந்தது.

புதன், 16 மே, 2012


 நினைவலைகள் - 1 :  முதல் பீர் (BEER)

முதல் முத்தம், முதல் காதல் போல முதன் முதலில் குடித்த பீரும் இன்று வரை பசுமையாக நினைவில் இருக்கிறது.

அந்த வரலாற்று நிகழ்வு நடந்தது  சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்னால் அதாவது சரியாக 1996 ஆம் வருடம். அப்போது எனக்கு வயது இருபது புதுவை தாகூர் கலை கல்லூரியில் இளங்கலை ( BSc) கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு  இருந்தேன்.  அக்காலகட்டத்தில்  கல்லூரியில் semester system எல்லாம் கிடையாது வருடத்துக்கு 5 தேர்வுகள், மூன்று வருடத்துக்கும் மொத்தமாக சேர்த்து பதினைந்து தேர்வுகள். தேர்வுக்கு பதினைந்து நாட்கள் முன்னால் படித்தால் அதுவே போதுமானது.  So, எந்தவித கவலையும் இல்லாமல் இளமை இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்த காலம். நண்பர்களோடு அரட்டை அடிப்பது, பீச்சுக்கு போவது, சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது, நன்றாக தூங்குவது இது எதுவும் இல்லையென்றால் தங்கைகளை வம்புக்கிழுப்பது என்று காலம் மனதிற்கு பிடித்தது போல உற்சாகமாக சென்று கொண்டு கொண்டிருந்தது. 

ஒரு பிப்ரவரி மாதம் மதிய நேரம், அப்பொழுதுதான் கல்லூரியிலிருந்து திரும்பி யிருந்தேன் மதிய உணவை முடித்துவிட்டு தொலைகாட்சியில் உலக கோப்பை கிரிக்கெட் பார்த்துகொண்டிருந்தேன்.  வயிறு நன்றாக நிரம்பி இருந்ததாலும், மின்விசிரி(FAN) மிதமான தை மாத காற்றை  அறை முழுக்க நிரப்பி கொண்டு இருந்ததாலும் கண்களில் தூக்கம் சிறிது சிறிதாக இறங்கி கொண்டிருந்தது. சட்டேன்று அந்த ஏகாந்த அமைதியை கிழித்து கொண்டு BIKE HORN இடைவிடாமல் வாசலில் ஒலித்தது, தூக்கம் கலைந்த எரிச்சலில் கொலைவெறியோடு வாசலுக்கு சென்று பார்த்தேன் நண்பன் நந்திவர்மன் நின்று கொண்டு இருந்தான்.

நண்பனை பற்றி சிறு குறிப்பு:

மிக நெருங்கிய நண்பர்களில் நந்திவர்மனும் ஒருவன் இன்று வரை. எங்கள் நண்பர்கள் வட்டத்தில் BIKE வைத்திருந்தது அவன் மட்டும்தான், நண்பர்களுக்கு செலவு செய்வதிலும், பிரச்சனை என்றால் முன்னுக்கு நிற்பதிலும் அவன் தான் முதன்மையானவன் அதுமட்டுமில்லாமல் ஜொள்ளு விடுவதில் கிட்டதட்ட Phd முடித்து இருப்பவன் அவனிடம் "மச்சான்,  அந்த பொண்ணு உன்னையே பார்க்குதுடா"  என்றால் சர்வநிச்சையமாக அனைவருக்கும் அன்று ஒரு PLATE மசாலா பூரி அல்லது கறி போண்டா GARANTY. இப்படியாக ஒரு வாரத்திருக்கு இரண்டு மசாலா பூரி  சாப்பிட்டு கொண்டிருந்த காலம். 

சரி பீருக்கு வருவோம்........

"என்னடா, இந்த நேரத்தில்"  என்றேன்,  

"மச்சான், MBA entrance result வந்திருச்சுடா" என்றான்  சோகமாக,

 "நீ ஏன்டா அதுக்கு  சோகமா இருக்க entrance   எழுதுனவன் தாண்டா கவலை படனும் " என்றேன்    

"மச்சி நானும் எழுதிநேன்டா ஆனா என் பேரு Final listல இல்லைடா, பயங்கர மூட் அவுட்ல இருக்கேன்.. " என்றான்  

எனக்கு தூக்கி வாரி போட்டது, "என்னது entrance எழுதினியா சொல்லவே இல்ல" என்றேன் 

"இல்ல மச்சி நம்ம கவிதா எழுதினா அதான் நானும்... "

(நண்பனுக்கு கிட்டதட்ட 6 பேப்பரில் அரியர் இருந்தது எல்லாம் இங்க தேவை இல்லாத தகவல் )

"இந்த கவலைய மறக்க  ஏதாவது செய்யன்னும், வா ஒரு பீர் அடிப்போம் " என்றான்.

இருவரும் உடனே கிளம்பி  ஏதாவது  ஒரு பாருக்கு செல்ல முடிவுசெய்து, 
முதல் முறை என்பதால் PONDY TOWNக்குள்  செல்லாமல் சற்று ஒதுக்குபுறமாக உள்ள முத்தியால்பேட்டை 'INTERNATIONAL BAR' ஐ தேர்ந்து எடுத்தோம். பைக்கில் பதினைந்து நிமிடத்தில் பார்  வந்தடைந்தோம். பைக்கை சற்று தள்ளி பார்க் செய்துவிட்டு சுற்றும் முற்றும் தெரிந்த முகங்கள்  ஏதாவது
தென்படுகிறதா என்று நோட்டம் விட்டு விறு விறுவென பாருக்குள் நுழைந் து  ஒதுக்கு புறமாக ஒரு மேசையை தேர்ந்தெடுத்து ஒரு HAYWARDS   2000 ORDER செய்தோம். பயந்துகொண்டே குடித்ததால் மிக விரைவாக பீரை காலி செய்துவிட்டு பாரை விட்டு வெளியேறினோம் . 

பீர் குடித்துவிட்டோம் என்ற எண்ணமே மனதுக்குள் ஒரு வித திமிரை உருவாக்கி இருந்தது.  யாரை  பார்த்தாலும் முறைக்க  தோன்றியது சும்மா நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பீச் ரோட்டில் இங்கும் அங்கும் நடந்து கொண்டே யிருந்தோம். குடித்தது என்னமோ ஒன்றரை டம்ளர் பீர்தான், ஆனா ஏதோ ஒரு FULL அடித்த கெத்தில் அன்று முழுக்க திரிந்தோம். வீட்டுக்கு போகணும் என்ற நினைப்பு வந்தவுடன் அணைத்து OVER REACTIONணும்  நொடியில் மறைந்து பயம் தொற்றி கொண்டது. பங்க் கடையில் ROJA பாக்கு வாங்கி வாயில் போட்டும் நம்பிக்கை வராமல் ஆளுக்கு ஒரு CHICLETS PACKET   வாங்கி வாயில் போட்டு பல முறை மாற்றி மாற்றி ஊதி பார்த்து கொண்டு ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தோம்.

இன்றைக்கும் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள இது போல கடந்த கால நினைவுகள் பெரிதும் உதவுகிறது .

வெள்ளி, 23 மார்ச், 2012

பயணம் - 3

ஒரு சனிக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தேன், Immigration counter இல் மிக நீண்ட வரிசை, பனிரெண்டு மணி நேர இடை விடாத பயணத்தால் உடல் சிறிது சோர்வாக இருந்தும் மனது உற்சாகமாக இருந்தது. Counter இல் immigration clearance வழங்கி கொண்டு இருந்தவர்  ஒரு நடுத்தர வயது பெண்மணி, என் முறை வந்தது அருகில் சென்று சிறு புன்னகையோடு 
வணக்கம் கூறினேன், எந்தவித பதிலும் சொல்லாமல் என்னை முறைத்து பார்த்தார் பிறகு passport இல் ஓங்கி seal வைத்தார். அவர் பாஸ்போர்டில் குத்தியது என் முகத்தில் குத்தியது போல் இருந்தது, இதை விட பெரியதாக யாரும் பயணிகளை அவமான படுத்த முடியாது. ஒரு பனிரெண்டு மணி நேர பயண தொலைவில் எவ்வளவு பெரிய கலாச்சார மாற்றம்.

பிறகு எனது பெட்டிகளை அள்ளி போட்டுகொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறினேன்.  வெளியே கண்கள் அம்மாவை தேடி அலைபாய்ந்தது கூட் டத்தில் அம்மாவை கண்டு பிடிப்பது அவ்வளவ்வு சிரமமாக இருக்கவில்லை. சிறிது நரை கூடி உடம்பு இளைத்து இருந்தாள். அவளை கண்டவுடன் கண்களில் நீர் வேகமாக நிறைந்து தாடையில் சூடாக வழிந்தது. என்னை வாரி அணைத்தாள், அம்மாவின் வாசம் மனதை நிறைத்தது அந்த அதிகாலை என் வாழ்வின் ஒரு உன்னதமான தருனமாக மாறியது.

சிறிது தொலைவில் பால்ய நண்பனும், மாமாவும் நின்று கொண்டிருந்தார்கள் நலம் பரிமாறி கொண்டு பெட்டிகளை carஇல் வைத்து விட்டு வண்டி ஓட்டுநரை எழுப்பினோம். அதிகாலை என்பதால் நல்ல தூக்கத்தில் இருந்தார், எழும்பியவரின் கண்கள் சிவந்து இருந்தது. அவரது தூக்கம் கலையும் வரை      
சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தோம்.

வண்டி pondicherry  நோக்கி பயணிக்க ஆரம்பித்தது..சென்னையும் மெதுவாக விழிக்க ஆரம்பித்து இருந்தது . முதல் ஒரு மணி நேரம் அனைவரும் இடைவிடாமல் பேசி கொண்டு இருந்தோம். அதிகாலை காரணமாக அனைவரும் சிறிது சிறிதாக உறக்கத்தில் ஆழ்ந்தனர். என் மனம் மட்டும் விழித்து கொண்டு ஏதேதோ பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டு இருந்தது. சென்னை புற நகரை தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது...நிறைய சிறிய வயது பெண்கள் கூட்டம் கூட்டமாக அந்நேரத்திலும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். சூடாக ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.


ஓட்டுனரிடம் வண்டியை ஒரு  டீ கடையில் நிறுத்த சொல்லி அனைவரும் இறங்கி டீ குடித்தோம். என் கண்கள் சாலை ஓரமாக மேய்ந்துகொண்டிருந்தது சாலையின் மறுபக்கத்தில் ஒரு சிறுமி தன் தகப்பனின் கையை பற்றி கொண்டு  ஏதேதோ பேசி கொண்டும் சிரித்து கொண்டும் சென்று இருந்தாள்...
பார்க்க மிக ரம்மியமாக இருந்தது....ஏனோ எனக்கு என் மகளின் நினைவு  தோன்றி மறைந்தது...மனதில் சொல்லமுடியாத உணர்வு எழந்து அடங்கியது.


எங்கேயோ படித்த ஒரு வாக்கியம் மனதில் தோன்றியது......

"ஒரு பெண்ணை பெறாமல் எந்த தகப்பனின் ஸ்தானமும் முழுமை அடைந்ததில்லை."  

பிகு : படித்துவிட்டு கமெண்ட் போடாமல் செல்பவர்களுக்கு முண்டகண்ணி  அம்மன் கோவிலில் முட்டை உடைத்து சூனியம் வைக்க படும்.