புதன், 12 டிசம்பர், 2012

நினைவலைகள் 2: ரஜினி கமல் மற்றும் சரோஜா அத்தை

சரோஜா அத்தைக்கு கோலம்ன்னா உசுரு, வீட்டு  வாசலுக்கும் மெயின் ரோட்டிற்கும் நடுவில் உள்ள இடத்தை நன்றாக சாணிய விட்டு மெழுகி கோலம் போட்டு படு சுத்தமாக வைத்து இருக்கும்  யாராவது தெரிஞ்சோ தெரியாமலோ கோலத்தின் மீது நடந்தாலோ சைக்கிளில் சென்றாலோ பத்ரகாளியாக மாறி கோலத்தை மிதிச்சவங்க  தெருமுனையை தான்றவரைக்கும் வண்ட வண்டையா கழுவி ஊத்தும். தமிழில் இவ்வளவு  'நல்ல' வார்த்தைகள் இருப்பதே அத்தையின் வசவுகளுக்கு  பிறகுதான்  தெரிந்தது. நானும் அத்தை  மகன் குமாரும் மிக கவனமாக அந்த 'நல்ல ' வார்த்தைகளை குறித்து கொண்டு ஞாயுறுதோறும் வெள்ளவேரிக்கு மற்ற நண்பர்களோடு சென்று ஆள் அரவமற்ற இடத்தில அவ்வார்த்தைகளை உரக்க சொல்லி ப்ராக்ட்டிஸ் செய்வோம்.

ஒரு நாள் அத்தை வீட்டு திண்ணையில் குமாரும் நானும் பராக்கு பார்த்தபடி பேசி கோண்டிருந்தோம். அப்போது எதிர் வீட்டு  ராஜவேலு எங்களை நோக்கி வந்து  கொண்டிருந்தான், ராஜவேலும் குமாரும் ஒரே வகுப்பு தோழர்கள், நான் அவர்களைவிட  மூன்று வயது சிறியவன். ராஜவேலு வெறித்தனமான கமல் ரசிகன்  நானும் குமாரும் ரஜினி ரசிகர்கள். கமலின் 'காக்கிசட்டை' ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த காலகட்டம் அது. ராஜவேலு அன்றுதான் படத்தை பார்த்திருப்பான் போல எங்கள் காதில் ரத்தம் வரும் அளவு கமல் புராணம் பாடி கொண்டிருந்தான். நடுநடுவே ரஜினியை வேறு நக்கல் விட்டு கொண்டிருந்தான். குமாருக்கும் எனக்கும்  எரிச்சல் உச்சி மண்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

கமல் படம் பெருசா, ரஜினி படம் பெருசா என்று தொடங்கிய வாதம் உங்கப்பா  பெரியவரா எங்கப்பபா பெரியவரா, உங்க வீடு பெருசா எங்க வீடு பெருசா, உங்க வீட்டு அண்டா பெருசா எங்க வீட்டு அண்டா பெருசா என்று முடிவில்லாமல் நீண்டு கொண்டிருந்தது  கடைசியாக ராஜவேலுவே ஒரு திட்டத்தை முன்வைத்தான் அதாவது காக்கிச்சட்டை படத்தில் கமலும் வில்லன் கூட்டத்தை சேர்ந்த ஒருவனும் சண்டை காட்சியில்  காலும் காலும் , கையும் கையும் கோர்த்துக்கொண்டு  ஒரு  'O'  வடிவத்தில்  சுற்றி சுற்றி வருவார்கள் என்றும் அதுபோல் ராஜவேலும் எங்கள் இருவரில் யாராவது ஒருவரும் சேர்ந்து சுற்றிவர வேண்டும்  யார் முதலில் கைகால் வலிக்கிறது என்று விலகுகிறார்களோ அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும்.

கமல் சார்பாக ராஜவேலு ரெடியாக, ரஜினி சார்பாக யார் போறதுன்னு உலகமாக கேள்வி எழுந்தது குமார் என்னை கூர்ந்து நோக்கினான், இன்னும் கொஞ்ச நேரம் நீடித்தால் நான் கமல் ரசிகனாக மாறஅனைத்து சாத்தியகூறும் இருந்ததை என் கண்களில் தெரிந்த பீதியின் வழியே மிக சுலபமாக கண்டுபிடித்து அவனே களத்தில் குதிக்க முடிவு செய்தான். நான் நடுவராக நியமிக்கப்பட்டேன், இருவரும் கைகால்களை கோர்த்துக்கொண்டு தயாராக எனக்கு குமாரும் ராஜவேலும் மறைந்து ரஜினி கமலாகவே தென்பட்டார்கள்.முதல் ரவுண்டு முடியும் போது  சாணி மெழுகிய வாசல் சிறியதாக பெயர்த்து கொண்டுவந்தது அடுத்தடுத்து ரவுண்டில் வாசல் அலங்கோலமாக காட்சியளித்தது அனால் இருவரும் விடாமல் சுற்றிக்கொண்டு இருந்தனர்.

திடீரென்று முதுகில் ஒரு அழுத்தத்தை உணர்ந்தேன் எனக்கும் பூமிக்கும் உள்ள இடைவேளி குறைந்து இருந்தது புரியற மாதிரி சொல்லனும்னா பப்பரக்கா என்று கீழே விழுந்து கிடந்தேன்.   திரும்பி பார்த்தேன் அத்தை ஆவேசமாக நின்று கொண்டிருந்தார் வேடிக்கை பார்த்த நமக்கே இவ்வளுவுனா வாசல நாஸ்தி பண்ண ரஜினி கமலோட நிலைய எண்ணி மனது வலியிலும்  சிறியதாக குதூகலம் அடைந்தது, அடுத்த அடி விழும் முன் மின்னலாக ஓடி எதிர்(கமல் ) வீட்டு மாட்டு கொட்டகையின் பின்னால் மறைந்தேன். கமலும் ஒரே தாவலில் ரோட்டை தாண்டி வீட்டுக்குள் ஓடி மறைந்தார். கடைசியில் அத்தையிடம் அகப்பட்டது ரஜினி, கையில் கிடைத்த தென்னமட்டையால் விளாச ஆரம்பித்தார் அத்தை. சிறிது நேரம் கழித்து  மெதுவாக எட்டி  பார்த்தேன்,   அடிபட்ட இடத்தை தடவி கொண்டு திண்ணையில் பரிதாபமாக ரஜினி,  கமல் இருந்த  இடமே தெரியவில்லை,  என் பக்கத்தில் இருந்த கமல் வீட்டு எருமை மாடு ரஜினியை நோக்கி ஏனோ பரிதாபமாக கத்தி(கதறி!?)    கொண்டு இருந்தது.

1 கருத்து:

  1. அட்டகாசமான நினைவலை கோபி, ரஜினி , கமல் படம் போல நீண்ட இடைவெளி விடாம அடிக்கடி எழுதுங்க பதிவரே

    பதிலளிநீக்கு